கனவுநிலையுரைத்தல் | திருக்குறள் அதிகாரம் 122 | Kanavunilaiyuraiththal | Thirukkural Adhikaram 122 – The Visions of the Night
குறள் 1211:
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
மு.வ விளக்க உரை:
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?
கலைஞர் விளக்க உரை:
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?
குறள் 1212:
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்
மு.வ விளக்க உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
கலைஞர் விளக்க உரை:
நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்
குறள் 1213:
நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்
மு.வ விளக்க உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
கலைஞர் விளக்க உரை:
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது
குறள் 1214:
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
மு.வ விளக்க உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.
கலைஞர் விளக்க உரை:
நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது
குறள் 1215:
நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது
மு.வ விளக்க உரை:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.
கலைஞர் விளக்க உரை:
காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!
குறள் 1216:
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்
மு.வ விளக்க உரை:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.
கலைஞர் விளக்க உரை:
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே
குறள் 1217:
நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது
மு.வ விளக்க உரை:
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?
கலைஞர் விளக்க உரை:
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?
குறள் 1218:
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து
மு.வ விளக்க உரை:
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.
கலைஞர் விளக்க உரை:
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்
குறள் 1219:
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்
மு.வ விளக்க உரை:
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.
கலைஞர் விளக்க உரை:
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்
குறள் 1220:
நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்
மு.வ விளக்க உரை:
நனவில் நம்மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?
சாலமன் பாப்பையா விளக்க உரை:
என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார் என்று என்னவரை ஏசும் இவ்வூர்ப் பெண்கள், அவர் நாளும் என் கனவில் வருவதைக் கண்டு அறியாரோ?
கலைஞர் விளக்க உரை:
என் காதலர் என்னைப் பிரிந்திருப்பதாக அவரைக் குற்றம் சாட்டுகிறார்களே, இந்த ஊரார், பிரிந்து சென்ற தமது காதலனைக் கனவில் காண்பது கிடையாதோ?
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]