அருளுடைமை | திருக்குறள் அதிகாரம் 25 | Arulutaimai | Thirukkural Adhikaram 25 – Compassion
குறள் 241:
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
மு.வ விளக்க உரை:
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.
கலைஞர் விளக்க உரை:
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது
குறள் 242:
நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை
மு.வ விளக்க உரை:
நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.
கலைஞர் விளக்க உரை:
பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்
குறள் 243:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
மு.வ விளக்க உரை:
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
கலைஞர் விளக்க உரை:
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்
குறள் 244:
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை
மு.வ விளக்க உரை:
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.
கலைஞர் விளக்க உரை:
எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்
குறள் 245:
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி
மு.வ விளக்க உரை:
அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.
கலைஞர் விளக்க உரை:
உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று
குறள் 246:
பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்
மு.வ விளக்க உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவரைப் பொருளையும் இழந்து தாம் துன்பம் அடைந்ததையும் மறந்தவர் என்று அறிஞர் கூறுவர்.
கலைஞர் விளக்க உரை:
அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்
குறள் 247:
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு
மு.வ விளக்க உரை:
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.
கலைஞர் விளக்க உரை:
பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது
குறள் 248:
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது
மு.வ விளக்க உரை:
பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பொருள் இல்லாமல் ஏழையாய்ப் போனவர் திரும்பவும் செல்வத்தால் பொலிவு பெறலாம்; அருள் இல்லாமல் போனவரோ, போனவர்தாம்; மீண்டும் அருள் உள்ளவராய் ஆவது கடினம்.
கலைஞர் விளக்க உரை:
பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது
குறள் 249:
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்
மு.வ விளக்க உரை:
அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
கலைஞர் விளக்க உரை:
அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்
குறள் 250:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து
மு.வ விளக்க உரை:
(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க.
கலைஞர் விளக்க உரை:
தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story