இடுக்கணழியாமை | திருக்குறள் அதிகாரம் 63 | Itukkan Azhiyaamai | Thirukkural Adhikaram 63 – Hopefulness in Trouble
குறள் 621:
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்
மு.வ விளக்க உரை:
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.
கலைஞர் விளக்க உரை:
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்
குறள் 622:
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
மு.வ விளக்க உரை:
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.
கலைஞர் விளக்க உரை:
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்
குறள் 623:
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்
மு.வ விளக்க உரை:
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.
கலைஞர் விளக்க உரை:
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்
குறள் 624:
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து
மு.வ விளக்க உரை:
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.
கலைஞர் விளக்க உரை:
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்
குறள் 625:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்
மு.வ விளக்க உரை:
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.
கலைஞர் விளக்க உரை:
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்
குறள் 626:
அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்
மு.வ விளக்க உரை:
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?
கலைஞர் விளக்க உரை:
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?
குறள் 627:
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்
மு.வ விளக்க உரை:
மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
உடம்பு துன்பத்திற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.
கலைஞர் விளக்க உரை:
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்
குறள் 628:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்
மு.வ விளக்க உரை:
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
கலைஞர் விளக்க உரை:
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை
குறள் 629:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்
மு.வ விளக்க உரை:
இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.
கலைஞர் விளக்க உரை:
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு
குறள் 630:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு
மு.வ விளக்க உரை:
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.
கலைஞர் விளக்க உரை:
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]