பண்புடைமை | திருக்குறள் அதிகாரம் 100 | Panputaimai | Thirukkural Adhikaram 100 – Courtesy
குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
மு.வ உரை:
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.
கலைஞர் உரை:
யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்
குறள் 992:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
மு.வ உரை:
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.
கலைஞர் உரை:
அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்
குறள் 993:
உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
மு.வ உரை:
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும் பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும்.
கலைஞர் உரை:
நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர்
குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு
மு.வ உரை:
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.
கலைஞர் உரை:
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்
குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு
மு.வ உரை:
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன
சாலமன் பாப்பையா உரை:
விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.
கலைஞர் உரை:
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும் அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்
குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்
மு.வ உரை:
பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.
சாலமன் பாப்பையா உரை:
பண்புடையவர்கள் வாழ்வதால்தான் மக்கள் வாழ்க்கை எப்போதும் நிலைத்து இருக்கிறது. அவர்கள் மட்டும் வாழாது போவார் என்றால். மனித வாழ்க்கை மண்ணுக்குள் புகுந்து மடிந்து போகும்.
கலைஞர் உரை:
உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்
குறள் 997:
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்
மு.வ உரை:
மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.
கலைஞர் உரை:
அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்
குறள் 998:
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை
மு.வ உரை:
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.
கலைஞர் உரை:
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்
குறள் 999:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்
மு.வ உரை:
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.
கலைஞர் உரை:
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்
குறள் 1000:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று
மு.வ உரை:
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.
கலைஞர் உரை:
பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]