புலவி நுணுக்கம் | திருக்குறள் அதிகாரம் 132 | Pulavi Nunukkam | Thirukkural Adhikaram 132 – Feigned Anger
குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
மு.வ விளக்க உரை:
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும் குணங்கெட்ட பெண்கள் எல்லாரும் உன் மார்பைத் தம் கண்ணால் பொதுவாக உண்பர்; அதனால் அவர்களின் எச்சிலாகிய உன் மார்பை நான் இனிச் சேரேன்.
கலைஞர் விளக்க உரை:
பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்
குறள் 1312:
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து
மு.வ விளக்க உரை:
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்)
கலைஞர் விளக்க உரை:
ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை “நீடுவாழ்க” என வாழ்த்துவேன் என்று நினைத்து
குறள் 1313:
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று
மு.வ விளக்க உரை:
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச் சூடினேன். அதற்கு அவள், நீர் விரும்பும் எவளுக்கோ அடையாளம் காட்டிச் சூடினீர் என்று சினந்து நின்றாள்.
கலைஞர் விளக்க உரை:
கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்
குறள் 1314:
யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று
மு.வ விளக்க உரை:
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
கலைஞர் விளக்க உரை:
“யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்” என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு “யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்” எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்
குறள் 1315:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்
மு.வ விளக்க உரை:
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப் பிரியேன் என்று சொன்னேன்; அப்படி என்றால் அடுத்த பிறவியில் பிரியப்போவதாக எண்ணிக் கண் நிறைய நீரினைக் கொண்டாள்.
கலைஞர் விளக்க உரை:
“இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று நான் சொன்னவுடன் “அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?” எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி
குறள் 1316:
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்
மு.வ விளக்க உரை:
நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு சமயம் நினைத்ததாக எண்ணி அப்படியானால் என்னை இடையில் மறந்திருக்கிறீர் என்று சொல்லித் தழுவத் தொடங்கியவள், விட்டுவிட்டு ஊடத் தொடங்கினாள்.
கலைஞர் விளக்க உரை:
“உன்னை நினைத்தேன்” என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;” அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?” எனக்கேட்டு “ஏன் மறந்தீர்?” என்று அவள் ஊடல் கொண்டாள்
குறள் 1317:
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
மு.வ விளக்க உரை:
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே மறுபடியும் நீர் இப்போது எவள் உம்மை நினைத்ததால் தும்மினீர், என்று கேட்டு ஊடி அழுதாள்.
கலைஞர் விளக்க உரை:
தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள் உடனே என்ன சந்தேகமோ “யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்” என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்
குறள் 1318:
தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
மு.வ விளக்க உரை:
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.
கலைஞர் விளக்க உரை:
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் “ஓ” உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?” எனக் கேட்டு அழுதாள்
குறள் 1319:
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று
மு.வ விளக்க உரை:
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லி சினம் கொள்வாள்.
கலைஞர் விளக்க உரை:
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் “ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?” என்று சினந்தெழுவாள்
குறள் 1320:
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று
மு.வ விளக்க உரை:
அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல், அவள் உறுப்புகளின் அழகை எண்ணி அவற்றையே பார்த்திருப்பேன். அதற்கு எவள் உறுப்புப் போல் இருக்கிறதென்று என் மேனியைப் பார்க்கிறீர். என்று சொல்லிச் சினப்பாள்.
கலைஞர் விளக்க உரை:
ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]