புல்லறிவாண்மை | திருக்குறள் அதிகாரம் 85 | Pullarivaanmai | Thirukkural Adhikaram 85 – Ignorance
குறள் 841:
அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
மு.வ விளக்க உரை:
அறியாமையே இல்லாமைப் பலவற்றுளளும் கொடிய இல்லாமையாகும், மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.
கலைஞர் விளக்க உரை:
அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும் மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது
குறள் 842:
அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்
மு.வ விளக்க உரை:
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவற்றவன் மனம் மகிழ்ந்து ஒன்றைப் பிறர்க்குத் தந்தால், அது பெறுகின்றவன் செய்த நல்வினையே.
கலைஞர் விளக்க உரை:
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்
குறள் 843:
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
மு.வ விளக்க உரை:
அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவு அற்றவர், தாமே நம்மை வருத்திக் கொள்ளும் வருத்தம், பகைவராலும்கூட அவருக்குச் செய்வது அரிது.
கலைஞர் விளக்க உரை:
எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்
குறள் 844:
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
மு.வ விளக்க உரை:
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.
கலைஞர் விளக்க உரை:
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்
குறள் 845:
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்
மு.வ விளக்க உரை:
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.
கலைஞர் விளக்க உரை:
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்
குறள் 846:
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
மு.வ விளக்க உரை:
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.
கலைஞர் விளக்க உரை:
நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்
குறள் 847:
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
மு.வ விளக்க உரை:
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.
கலைஞர் விளக்க உரை:
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்
குறள் 848:
ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
மு.வ விளக்க உரை:
தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.
கலைஞர் விளக்க உரை:
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்
குறள் 849:
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
மு.வ விளக்க உரை:
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.
கலைஞர் விளக்க உரை:
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான் அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்
குறள் 850:
உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்
மு.வ விளக்க உரை:
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.
கலைஞர் விளக்க உரை:
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் “பேய்”களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]