சிற்றினஞ்சேராமை | திருக்குறள் அதிகாரம் 46 | Sitrinanjeraamai | Thirukkural Adhikaram 46 – Avoiding mean Associations
குறள் 451:
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
மு.வ விளக்க உரை:
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.
கலைஞர் விளக்க உரை:
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்
குறள் 452:
லத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு
மு.வ விளக்க உரை:
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.
கலைஞர் விளக்க உரை:
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்
குறள் 453:
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்
மு.வ விளக்க உரை:
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.
கலைஞர் விளக்க உரை:
ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும் அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்
குறள் 454:
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு
மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.
கலைஞர் விளக்க உரை:
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்
குறள் 455:
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
மு.வ விளக்க உரை:
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.
கலைஞர் விளக்க உரை:
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்
குறள் 456:
மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை
மு.வ விளக்க உரை:
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.
கலைஞர் விளக்க உரை:
மனத்தின் தூய்மையால் புகழும், சேர்ந்த இனத்தின் தூய்மையால் நற்செயல்களும் விளையும்
குறள் 457:
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்
மு.வ விளக்க உரை:
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
கலைஞர் விளக்க உரை:
மனத்தின் நலம் உயிருக்கு ஆக்கமாக விளங்கும் இனத்தின் நலமோ எல்லாப் புகழையும் வழங்கும்
குறள் 458:
மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து
மு.வ விளக்க உரை:
மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.
கலைஞர் விளக்க உரை:
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே வலிமை வந்து வாய்க்கும்
குறள் 459:
மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து
மு.வ விளக்க உரை:
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
கலைஞர் விளக்க உரை:
நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்
குறள் 460:
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்
மு.வ விளக்க உரை:
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
கலைஞர் விளக்க உரை:
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]