சொல்வன்மை | திருக்குறள் அதிகாரம் 65 | Solvanmai | Thirukkural Adhikaram 65 – Power of Speech
குறள் 641:
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
மு.வ விளக்க உரை:
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த நாநலம் தனிச்சிறப்புடையது, ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நாவினால் பேசிக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை என்னும் சிறப்பு வேறு எந்தச் சிறப்பிலும் அடங்காத தனிச்சிறப்பாகும்.
கலைஞர் விளக்க உரை:
சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்
குறள் 642:
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு
மு.வ விளக்க உரை:
ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.
கலைஞர் விளக்க உரை:
ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்
குறள் 643:
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
மு.வ விளக்க உரை:
சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்)
கலைஞர் விளக்க உரை:
கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்
குறள் 644:
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்
மு.வ விளக்க உரை:
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும், அத் தகைய சொல்வன்மையை விடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
எவரிடம் பேசகிறோமோ அவர் குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், தோற்றம், வயது ஆகிய தகுதிகளை அறிந்து பேச்சு; அப்படிப் பேசுவதைவிட உயர்ந்த அறமும் பொருளும் வேறு இல்லை.
கலைஞர் விளக்க உரை:
காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும் அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை
குறள் 645:
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
மு.வ விளக்க உரை:
வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.
கலைஞர் விளக்க உரை:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
குறள் 646:
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்
மு.வ விளக்க உரை:
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.
கலைஞர் விளக்க உரை:
மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்
குறள் 647:
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது
மு.வ விளக்க உரை:
தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், சொல்லும் செய்தி கடினமானது என்றாலும் சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகையாளர் என்றாலும் அஞ்சாதவன் இவன்மீது பகைகொண்டு வெல்வது எவர்க்கும் கடினமே.
கலைஞர் விளக்க உரை:
சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது
குறள் 648:
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
மு.வ விளக்க உரை:
கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனியாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
சொல்லும் செய்திகளை வரிசைபடக் கோத்து இனிதாகச் சொல்லும் ஆற்றலை உடையவர் என்றால், அவர் சொல்வனவற்றை உலகம் விரைந்து ஏற்றுக் கொள்ளும்.
கலைஞர் விளக்க உரை:
வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள்
குறள் 649:
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்
மு.வ விளக்க உரை:
குற்றமற்றவையாகியச் சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பலச் சொற்களைச் சொல்லிக்கொண்டிருக்க விரும்புவர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
குற்றமற்ற சில சொற்களால் சொல்லும் ஆற்றல் இல்லாதவர், பலபல சொற்களைப் பேச விரும்புவர்.
கலைஞர் விளக்க உரை:
குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்
குறள் 650:
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரிந்துரையா தார்
மு.வ விளக்க உரை:
தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.
கலைஞர் விளக்க உரை:
கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story