தீ நட்பு | திருக்குறள் அதிகாரம் 82 | Thee Natpu | Thirukkural Adhikaram 82 – Evil Friendship
குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
மு.வ விளக்க உரை:
அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.
கலைஞர் விளக்க உரை:
நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லது
குறள் 812:
உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
மு.வ விளக்க உரை:
தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும், பயன் இல்லை என்றால் நட்பை விலக்கியும் வாழ்வதில் தமக்கு இணை இல்லாதவராய் இருப்பாரின் நட்பைப் பெற்றென்ன இழந்தென்ன?
கலைஞர் விளக்க உரை:
தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?
குறள் 813:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
மு.வ விளக்க உரை:
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின் நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும் திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.
கலைஞர் விளக்க உரை:
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்
குறள் 814:
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
மு.வ விளக்க உரை:
போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப் போன்றவரின் நட்பைக் காட்டிலும் தனிமையாக இருப்பதே முதன்மையானது.
கலைஞர் விளக்க உரை:
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்
குறள் 815:
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
மு.வ விளக்க உரை:
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.
கலைஞர் விளக்க உரை:
கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்
குறள் 816:
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
மு.வ விளக்க உரை:
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.
கலைஞர் விளக்க உரை:
அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்
குறள் 817:
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
மு.வ விளக்க உரை:
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.
கலைஞர் விளக்க உரை:
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்
குறள் 818:
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
மு.வ விளக்க உரை:
முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.
கலைஞர் விளக்க உரை:
நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்
குறள் 819:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
மு.வ விளக்க உரை:
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும்.
கலைஞர் விளக்க உரை:
சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்
குறள் 820:
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
மு.வ விளக்க உரை:
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.
கலைஞர் விளக்க உரை:
தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]