மன்னரைச் சேர்ந்தொழுதல் | திருக்குறள் அதிகாரம் 70 | Conduct in the Presence of the King | Thirukkural Adhikaram 70 – Conduct in the Presence of the King
குறள் 691:
அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
மு.வ விளக்க உரை:
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.
கலைஞர் விளக்க உரை:
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்
குறள் 692:
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கந் தரும்
மு.வ விளக்க உரை:
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.
கலைஞர் விளக்க உரை:
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்
குறள் 693:
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது
மு.வ விளக்க உரை:
( அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.
கலைஞர் விளக்க உரை:
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும் அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல
குறள் 694:
செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து
மு.வ விளக்க உரை:
வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.
கலைஞர் விளக்க உரை:
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்
குறள் 695:
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்காற் கேட்க மறை
மு.வ விளக்க உரை:
(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.
கலைஞர் விளக்க உரை:
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்
குறள் 696:
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்
மு.வ விளக்க உரை:
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.
கலைஞர் விளக்க உரை:
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்
குறள் 697:
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்
மு.வ விளக்க உரை:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்திகளை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்திகளை எப்போதும் சொல்லாது விடுக.
கலைஞர் விளக்க உரை:
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்
குறள் 698:
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்
மு.வ விளக்க உரை:
(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.
கலைஞர் விளக்க உரை:
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்
குறள் 699:
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்
மு.வ விளக்க உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
கலைஞர் விளக்க உரை:
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்
குறள் 700:
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்
மு.வ விளக்க உரை:
யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.
கலைஞர் விளக்க உரை:
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
கடவுள் வாழ்த்து | The Praise of God | அறத்துப்பால் | Virtue | thirukural, thirukkural, tirukural, tirukkural, திருவள்ளுவர் திருக்குறள் ,thiruvalluvar, thirukural chapter, athigaram, kural, english, transalation, transliteration, section,1330 Thirukural, tamil thirukural, english couplets, thirukural search, tamil tutorial, thirukural in tamil, learn thirukural,