வரைவின்மகளிர் | திருக்குறள் அதிகாரம் 92 | Varaivinmakalir | Thirukkural Adhikaram 92 – Wanton Women
குறள் 911:
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
மு.வ உரை:
அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.
லைஞர் உரை:
அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்
குறள் 912:
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்
மு.வ உரை:
கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.
கலைஞர் உரை:
ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது
குறள் 913:
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று
மு.வ உரை:
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.
கலைஞர் உரை:
விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்
குறள் 914:
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
மு.வ உரை:
பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
கலைஞர் உரை:
அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்
குறள் 915:
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்
மு.வ உரை:
இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.
சாலமன் பாப்பையா உரை:
இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
கலைஞர் உரை:
இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்
குறள் 916:
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்
மு.வ உரை:
அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.
சாலமன் பாப்பையா உரை:
தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.
கலைஞர் உரை:
புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்
குறள் 917:
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
மு.வ உரை:
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.
சாலமன் பாப்பையா உரை:
பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.
கலைஞர் உரை:உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்
குறள் 918:
ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
மு.வ உரை:
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.
கலைஞர் உரை:
வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள்
குறள் 919:
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு
மு.வ உரை:
ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.
கலைஞர் உரை:
விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் “நரகம்” எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை
குறள் 920:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
மு.வ உரை:
இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.
கலைஞர் உரை:
இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]