வெகுளாமை | திருக்குறள் அதிகாரம் 31 | Vekulaamai | Thirukkural Adhikaram 31 – Restraining Anger
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்
மு.வ உரை:
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?
சாலமன் பாப்பையா உரை:
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?
கலைஞர் உரை:
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
குறள் 302:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற
மு.வ உரை:
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.
கலைஞர் உரை:
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை
குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்
மு.வ உரை:
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
கலைஞர் உரை:
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்
குறள் 304:
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற
மு.வ உரை:
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?
சாலமன் பாப்பையா உரை:
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?
கலைஞர் உரை:
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்
குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
மு.வ உரை:
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.
கலைஞர் உரை:
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்
குறள் 306:
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
மு.வ உரை:
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.
கலைஞர் உரை:
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்
குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
மு.வ உரை:
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.
கலைஞர் உரை:
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்
குறள் 308:
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
மு.வ உரை:
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.
கலைஞர் உரை:
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது
குறள் 309:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்
மு.வ உரை:
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.
கலைஞர் உரை:
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்
குறள் 310:
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
மு.வ உரை:
சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா உரை:
பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.
கலைஞர் உரை:
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]