திருக்குறள் | Thirukural | குறள் | திருவள்ளுவர் | அதிகாரம் 19 | புறங்கூறாமை | Thirukurla adhikaram 19 Purangooraamai | Not Backbiting| 1330 Kural | 134 adhikaram in tamil PDF | அறத்துப்பால், பாயிரவியல் இல்லறவியல் tamil, english translation, transliteration அறத்துப்பால் | பாயிரவியல் | இல்லறவியல் | துறவறவியல் | ஊழியல் | பொருட்பால் Thirukkural in tamil | Thiruvalluvar | Kural explanation | Tiruvallurar kural | thirukural with tamil meaning | thirukural tamil | thirukural online | adhigaram
குறள் 181:
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
மு.வ விளக்க உரை:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது
கலைஞர் விளக்க உரை:
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது
குறள் 182:
அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை
மு.வ விளக்க உரை:
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.
கலைஞர் விளக்க உரை:
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது
குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்
மு.வ விளக்க உரை:
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
கலைஞர் விளக்க உரை:
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று
குறள் 184:
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்
மு.வ விளக்க உரை:
எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.
கலைஞர் விளக்க உரை:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு
குறள் 185:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
மு.வ விளக்க உரை:
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.
கலைஞர் விளக்க உரை:
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்
குறள் 186:
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்
மு.வ விளக்க உரை:
மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.
கலைஞர் விளக்க உரை:
பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்
குறள் 187:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
மு.வ விளக்க உரை:
மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.
கலைஞர் விளக்க உரை:
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்
குறள் 188:
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு
மு.வ விளக்க உரை:
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!
கலைஞர் விளக்க உரை:
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?
குறள் 189:
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை
மு.வ விளக்க உரை:
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!
கலைஞர் விளக்க உரை:
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது
குறள் 190:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு
மு.வ விளக்க உரை:
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
சாலமன் பாப்பையா விளக்க உரை:
புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?
கலைஞர் விளக்க உரை:
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story