மு.வ விளக்க உரை: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை: ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
கலைஞர் விளக்க உரை: பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்
குறள் 193:
நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை
மு.வ விளக்க உரை: ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை: பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
கலைஞர் விளக்க உரை: பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்
குறள் 194:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து
மு.வ விளக்க உரை: பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை: பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
கலைஞர் விளக்க உரை: பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்