சிறுவர், சிறுமிகளில் கூடவா முதுகுவலி என்று யோசிக்கிறீர்கள் தானே! ஆம். இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இது நிஜம்தான் நாம் கடைபிடிக்கும் வாழ்வுமுறை இதற்கு முதன்மையான காரணம். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதை காணலாம்.
சிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை / முதுகுப்பையைச் சுமந்து செல்வதை அனைவரும் பார்த்திருக்கிறோம். பையிலுள்ள சுமை மிகுந்த கனமானவுடன், முதுகுப் பைகள் சிறுவர்களை கீழே இழுக்கத் தொடங்குகின்றன. வழக்கமாக முதுகுப் பைகள் உங்கள் மேல்முகுகில் ஆரம்பித்து நடுமுதுகு வரை மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் அதிக எடையினால் முதுகுப்பை, நடுமுதுகிலுருந்து இடுப்பு வரை தொங்க நேர்கிறது. இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு மற்றும் தோள்பட்டையில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இவ்வழுத்தம் தசைகளை வலிமையிழக்கச் செய்து மூட்டுகள் மற்றும் தண்டுவடத்தை பாதிக்கிறது.
முதுகுப்பை அதிக எடையினால் சிறுவர்களை பின்புறம் இழுக்கிறது, ஆனால் சிறுவர்கள் முன்னே நோக்கி நடக்கின்றனர். இதனால் நாளடைவில் கீழ்முதுகுப் பகுதியில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே கீழ் முதுகுப் பகுதியில் தொடர்ந்து அழுத்த, எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது.