ஊக்கமுடைமை | திருக்குறள் அதிகாரம் 60 | Ookkamutaimai | Thirukkural Adhikaram 60 – Energy
குறள் 591:
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று
மு.வ விளக்க உரை:
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?
கலைஞர் விளக்க உரை:
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர் ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்
குறள் 592:
உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
மு.வ விளக்க உரை:
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.
கலைஞர் விளக்க உரை:
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது
குறள் 593:
ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்
மு.வ விளக்க உரை:
ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்( இழந்து விட்டக்காலத்திலும்) இழந்து விட்டோம் என்று கலங்க மாட்டார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஊக்கத்தைத் தம் கைவசம் கொண்டவர், செல்வத்தை இழந்தாலும், இழந்து விட்டோமோ என்று மனம் கலங்க மாட்டார்.
கலைஞர் விளக்க உரை:
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்
குறள் 594:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
மு.வ விளக்க உரை:
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.
கலைஞர் விளக்க உரை:
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்
குறள் 595:
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு
மு.வ விளக்க உரை:
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.
கலைஞர் விளக்க உரை:
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும் அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்
குறள் 596:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
மு.வ விளக்க உரை:
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.
கலைஞர் விளக்க உரை:
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும் அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது
குறள் 597:
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு
மு.வ விளக்க உரை:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன்மீது அம்புகள் புதைந்து புண்பட்டபோதும் யானை தளராமல் தன் பெருமையை நிலைநிறுத்தும்; இதுபோல ஊக்கம் உடையவர் தமக்கு கேடு வந்த போதும் ஊக்கம் இழக்கமால் தம் பெருமையை நிலைநிறுத்துவர்.
கலைஞர் விளக்க உரை:
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்
குறள் 598:
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு
மு.வ விளக்க உரை:
ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.
கலைஞர் விளக்க உரை:
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை
குறள் 599:
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்
மு.வ விளக்க உரை:
யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
கலைஞர் விளக்க உரை:
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்
குறள் 600:
உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு
மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.
கலைஞர் விளக்க உரை:
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story