பயனில சொல்லாமை | திருக்குறள் அதிகாரம் 20 | Payanila Sollaamai | Thirukkural Adhikaram 20 – Against Vain Speaking
திருக்குறள் | Thirukural | குறள் | திருவள்ளுவர் | அதிகாரம் 20 | பயனில சொல்லாமை | Thirukurla adhikaram 20 Payanila Sollaamai | Against Vain Speaking| 1330 Kural | 135 adhikaram in tamil PDF | அறத்துப்பால், பாயிரவியல் இல்லறவியல் tamil, english translation, transliteration அறத்துப்பால் | பாயிரவியல் | இல்லறவியல் | துறவறவியல் | ஊழியல் | பொருட்பால் Thirukkural in tamil | Thiruvalluvar | Kural explanation | Tiruvallurar kural | thirukural with tamil meaning | thirukural tamil | thirukural online | adhigaram
குறள் 191:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
மு.வ விளக்க உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
கலைஞர் விளக்க உரை:
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்
குறள் 192:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது
மு.வ விளக்க உரை:
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
கலைஞர் விளக்க உரை:
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்
குறள் 193:
நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
மு.வ விளக்க உரை:
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
கலைஞர் விளக்க உரை:
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்
குறள் 194:
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
மு.வ விளக்க உரை:
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
கலைஞர் விளக்க உரை:
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்
குறள் 195:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்
மு.வ விளக்க உரை:
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
கலைஞர் விளக்க உரை:
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்
குறள் 196:
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்
மு.வ விளக்க உரை:
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.
கலைஞர் விளக்க உரை:
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்
குறள் 197:
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
மு.வ விளக்க உரை:
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.
கலைஞர் விளக்க உரை:
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது
குறள் 198:
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்
மு.வ விளக்க உரை:
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
கலைஞர் விளக்க உரை:
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்
குறள் 199:
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
மு.வ விளக்க உரை:
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
கலைஞர் விளக்க உரை:
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்
குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
மு.வ விளக்க உரை:
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.
கலைஞர் விளக்க உரை:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story