வினைத்தூய்மை | திருக்குறள் அதிகாரம் 66 | Vinaiththooimai | Thirukkural Adhikaram 66 – Purity in Action
குறள் 651:
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்
மு.வ விளக்க உரை:
ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.
கலைஞர் விளக்க உரை:
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்
குறள் 652:
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
மு.வ விளக்க உரை:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
கலைஞர் விளக்க உரை:
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்
குறள் 653:
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்
மு.வ விளக்க உரை:
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கலைஞர் விளக்க உரை:
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்
குறள் 654:
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்
மு.வ விளக்க உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
கலைஞர் விளக்க உரை:
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்
குறள் 655:
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று
மு.வ விளக்க உரை:
பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.
கலைஞர் விளக்க உரை:
`என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று
குறள் 656:
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
மு.வ விளக்க உரை:
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.
கலைஞர் விளக்க உரை:
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது
குறள் 657:
பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை
மு.வ விளக்க உரை:
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.
கலைஞர் விளக்க உரை:
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்
குறள் 658:
கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்
மு.வ விளக்க உரை:
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.
கலைஞர் விளக்க உரை:
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்
குறள் 659:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை
மு.வ விளக்க உரை:
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்
சாலமன் பாப்பையா விளக்க உரை:
பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.
கலைஞர் விளக்க உரை:
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும் நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்
குறள் 660:
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று
மு.வ விளக்க உரை:
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.
கலைஞர் விளக்க உரை:
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]